Monday, September 26, 2016

சயாம் – பர்மா (மரண ரயில் பாதையில்)


ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து விட்ட அதன் இயக்குநர். குறிஞ்சி வேந்தனுக்கு என்னை எழுப்ப மனமின்றி, வம்சியை எழுப்பி பேச ஆரம்பித்துவிட்டிருக்கிறார்.



பிரகாஷ், வம்சி என அவர் மனநிலைக்கு ஏற்ற மனிதர்களிடம் அவர் காலை சாப்பாடு சாப்பிடாமல் கூட அப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.



அன்று காலையிலேயே என்னை சந்திக்க வந்திருந்த ஓவியர்கள் துரை, எழிலன், அவருடைய தாய்மாமாவும் (அவரும் ஓவியர்தான்) அவர்கள் உரையாடலுடன் சங்கமித்தார்கள்.



பாதி தூக்கமும், பாதி நடையுமாய் நான் மாலை நடைபெற உள்ள டெண்ட்கொட்டாய் நிகழ்விற்கு நண்பர்களை அழைத்துக் கொண்டிருந்தேன்.



நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேல் இரு மடங்கு பார்வையாளர்கள் எங்கள் மொட்டைமாடியை ஆக்ரமித்து தரையில் உட்கார்ந்திருந்தாகள்.



ஒரு சிறு அறிமுகத்துடன் படம் திரையிடப்பட்டது. படம் முடிந்து எப்படி ஒரு வார்த்தையும் என்னால் பேச முடியவில்லையோ அப்படியே இப்போதும் ஒரு வார்த்தையும் அதைப்பற்றி எழுதப் போவதில்லை.




ஆனால் திரையிடல் முடிந்து குறிஞ்சி வேந்தன் இங்கிலாந்து, அமெரிக்க, பிரான்ஸ் என பல நாடுகளிலும் தமிழ் நாட்டில் சென்னை, மதுரை இரு நகரங்களிளும், இப்போது திருவண்ணாமலையிலும் இப்படம் திரையிடப்படுகிறது. இந்நிகழ்வு எனக்குக் கொடுத்த மன நிலையை வேறெந்த நிகழ்விலும் நான் அடையவில்லை. என வார்த்தை தடுமாறினார். நான் பேச்சற்று போய் தாங்க முடியாத துக்கத்திலிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அடுத்த ஒரு மணி நேரமாகியும் யாரும் அங்கிருந்து போகாமல் திக்பிரமைப் பிடித்து  அங்கேயே நின்றுகொண்டும், அவரோடு சொல்ல முடியாத செய்திகள் இன்னும் இருக்கிறதா? என கேட்டு கொண்டிருந்தார்கள்.




இத்தனை லட்சம் மனிதப்படுகொலைகளுக்கு உலகம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.  



நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்


என் இருபது வருஷ E.B. சர்வீஸ்வில் இல்லாதவாறு அன்றிரவு பதினோறு மணிக்குத்தான் வீட்டிற்கு வந்தேன். ஐம்பது பேருக்கு புது appointment  போட வேண்டியிருந்தது. சந்தோஷத்தோடு அதை செய்து முடிக்க அவ்வளவு நேரம் பிடித்தது.

கோவை, சத்தியமங்கலம், ஈரோடு என பல ஊர்களிலிருந்துநம்மாழ்வாரின் ஆலவிழுதுகள் அமைப்பின் சார்பில் என்னை சந்திப்பதற்கு வந்திருந்த நண்பர்களை நீண்ட நேரம் காக்க வைத்தது வருத்தமாயிருந்தது.



சில வார்த்தைகள் பேசியபின் நான் இருந்த சோர்வின் பொருட்டு அடுத்த நாள் காலைக்கு எங்கள் உரையாடலை தள்ளிப் போட்டோம்.

ஜெயஸ்ரீ வீட்டு மொட்டை மாடி அவர்களுக்கான தங்குமிடமென அவர்களே முடிவு செய்து கொண்டார்கள்.

பரந்த வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்த்து படுத்துக் கிடப்பது கொடுப்பினைதான்.



அடுத்த நாள் காலையிலேயே கோவையிலிருந்து வந்திருந்த நண்பர் கௌதமும், மைலத்திலிருந்து வந்திருந்த கார்த்தியும் உடன் இணைந்து கொள்ள மாமரத்தடி இளங்காலை காற்று மோத உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.



டிசம்பர் 24, 25, 26 மூன்று நாட்கள்நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள் எங்கள் நிலத்தில் முகாமிடப் போகிறார்கள். 200 பேரிலிருந்து 250 வரை வர வாய்ப்புண்டு. ஒவ்வொரு நாளும் அற்புதமான பல நிகழ்வுகளை முடிவு செய்தோம்.

கலை, இலக்கியம், இயற்கை வேளாண்மை, மாற்று கட்டிடக்கலை, நாடகம், சினிமா, ஆவணப்படம், சூழலியல், மாற்றுக் கல்வி என எங்கள் திட்டம் விரிவடைந்து கொண்டே போனது.



குழைந்தைகளுக்கென களிமன் சிற்பம் செய்தல், சேர்ந்திசைப் பாடல், குளத்தில் குளிப்பது, ஓவியம் வரைதல் என எங்கள் கேன்வாஸ் நீண்டது.

எல்லாவற்றையும் அமைதியாய் தூர இருந்து கேட்டுக் கொண்டிருந்த மகள் மானசி சொன்னாள்.



‘‘நீங்கத் திட்டமிட்டதெல்லாம் நடந்துவிட்டால் அநேகமாக நான் பார்த்ததில் இதுதான் ஆகப் பெரிய நிகழ்வு’’ பெரிய மனுஷி சொல்லிவிட்டாள்.

அப்புறமென்ன?



அடுத்த நாள் மதியம் அவல் பாயசமின்றி சாப்பிட மாட்டோம் என அவர்கள் அடம்பிடித்து பத்து முழுத்தேங்காயை உரிக்க ஆரம்பித்தார்கள்.



அது அவ்விதமேயானது.


டிசம்பர் குளிரில், மலரப் போகும் அந்த மூன்று நாட்களின் மலர்தலுக்கு இப்போதியிருந்தே மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.